குமராட்சி அருகே நளன்புத்தூரில் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை
*விவசாயிகள் வலியுறுத்தல்
காட்டுமன்னார்கோவில் : வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.குமராட்சி அருகே வடக்கு ராஜன் வாய்க்காலில் இருந்து பருத்திக்குடி வாய்க்கால் பிரிந்து செல்கிறது.
இந்த வாய்க்காலில் இருந்து நளம்புத்தூர் வாய்க்கால் பிரிந்து செல்கிறது. நளன்புத்தூர் வாய்க்கால் மூலம் கீழப்பருத்திக்குடி, முள்ளங்குடி, நளன்புத்தூர், ஆலம்பாடி, அத்திப்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு விவசாய பயன்பாட்டுக்கு செல்கிறது. இதன் மூலம் சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த வாய்க்கால் இப்பகுதி விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்த வாய்க்கால் முழுவதும் தற்போது செடி, கொடி, நாணல் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனால் வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இப்பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர்.
ஒரு மாதத்தில் நடவு பணி துவங்க உள்ள நிலையில் பாசன வாய்க்கால் சீரமைக்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். வாய்க்கால் முழுவதையும் உடனே தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருப்பதால் தான் வாய்கால் முழுவதும் நாணல், செடி, கொடிகள் வளர்ந்து வாய்க்கால் இருப்பதே தெரியாத அளவில் உள்ளது. இது போன்று வாய்க்காலை அடைத்துக் கொண்டு செடிகள், கொடிகள் இருப்பதால், பாசனத்துக்கு போதுமான தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் இப்குதிகளில் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த வாய்க்கால் முழுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன், வாய்க்கால் முழுவதையும் செடி, கொடிகளை அகற்றி தூர்வாரி பாசனத்துக்கு கடைமடை வரை தடையின்றி தண்ணீர் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.