குமாரபுரம் அருகே சாலையோரம் கொட்டி எரிக்கப்படும் தனியார் மருத்துவமனை கழிவுகள்
*நோய்கள் பரவும் என பொதுமக்கள் அச்சம்
குமாரபுரம் : குமாரபுரம் அருகே கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈத்தவிளை சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் தனியார் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை பேரூராட்சி ஊழியர்கள் நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றி வந்து இங்கு கொட்டுகிறார்கள்.
மேலும் தூய்மை பணியாளர்கள் தனியார் மருத்துவமனையில் இருந்து குப்பையுடன் சேகரித்துவரும் ஊசி மருந்து குப்பிகள், மற்றும் பல மருத்துவ கழிவுகளை ஒன்றாக போட்டு எரியூட்டுகிறார்கள். மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து மக்காத குப்பையை மறுசுழற்சி செய்யாமல் எரியூட்டுகிறார்கள்.
கட்டாயமாக குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தும்போது பேரூராட்சி ஊழியர்கள் இப்படி கொட்டி ஏரியூட்டுவதால் அப்பகுதி மக்கள் நோய்வாய்ப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோதநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஏற்கனவே வில்லுக்குறி பேரூராட்சியில் பணிபுரியும் போது ஒரு தனியார் மருத்துவமனை கழிவுகளை கொண்டு வந்து எரியூட்டியதால் சர்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
எனவே, தனியார் மருத்துவ கழிவுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்து எரியூட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.