குளத்தூர் தெற்கு கண்மாய்க்கு செல்லும் நீர்வழி ஓடை ஆக்கிரமிப்பு
*அகற்ற விவசாயிகள் கோரிக்கை
குளத்தூர் : தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு கண்மாய் குளத்தூர், பனையூர், வேப்பலோடை ஆகிய கிராம பகுதி விவசாய நிலங்களை இணைந்து உள்ளது. இக்கண்மாய்க்கு பருவமழை காலத்தில் எப்போதும்வென்றான் நீர்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் மிளகுநத்தம், முள்ளூர், வீரபாண்டியபுரம் வழியாக முத்துக்குமரபுரம் சப்ளை சேனலில் இருந்து கிழக்காக செல்லும் நீர்வழி ஓடை வழியாக தண்ணீர் தெற்கு கண்மாய்க்கு வருகிறது.
இந்நிலையில் இக்கண்மாய்க்கு வரும் நீர்வழி ஓடைகளை கடந்த சில வருடமாகவே சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். தெற்கு கண்மாயின் மேற்கு பகுதி நீர்வழி ஓடைகள் முழுவதுமாக கரம்பை மண் கொட்டி ஓடைகளில் இருந்து தண்ணீர் செல்ல வழியில்லாமல் அடைத்து வைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இக்கண்மாயை ஒட்டியுள்ள காமராஜர் நகர் குடியிருப்புகள் பருவமழை காலத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும் நீர்வழி ஓடைகளை ஆக்கிரமிப்பதால் கண்மாய்களுக்கு செல்ல வேண்டிய தண்ணீர் விவசாய நிலங்களுக்கு உள்ளும், குடியிருப்பு பகுதிகளுக்கும் செல்கிறது. இதனால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கு மழைகாலங்களில் பெரும் சிரமமாகவே உள்ளது. எனவே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நீர்வழி ஓடைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு ஓடைகளை தூர்வாரவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.