பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இன்று மகிஷாசூர சம்ஹாரம்
உடன்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் விமர்சையாக நடைபெற்ற தசரா விழாவின் சூரசம்கார நிகழ்ச்சியை காண மக்கள் குவிந்து வருகின்றனர். காளி, அம்மன் வேடமிட்டு தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் இன்று மகிஷா சூரசம்காரம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த செப்.23ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
10 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவில் தினமும் காலை 7.30 மணி, காலை 9மணி, 10.30மணி, பகல் 12 மணி, பகல் 1.30மணி, மாலை 4.30 மணி, மாலை 6 மணி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. 1ம் திருவிழா முதல் 9ம் திருவிழா வரை தினசரி இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் ஒவ்வொரு திருக்கோலத்தில் திருவீதி உலா நடந்து வருகிறது.
6ம் திருவிழா முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு வேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகளுடன் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் காணிக்கை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
10ம் திருவிழாவான இன்று (2ம் தேதி) நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அன்னை முத்தாரம்மன், மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து மறுநாள் அதிகாலை 1 மணிக்கு கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
பின்னர் 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோயில் முன்பு எழுந்தருளும் அன்னைக்கு சாந்தாபிஷேக ஆராதனையும், 3 மணிக்கு அபிஷேக மேடையில் சிறப்பு ஆராதனையும், காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா வருதலும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4.30 மணிக்கு சப்பரம் கோயிலுக்கு வந்ததும் பக்தர்கள் காப்பு களைந்து விரதத்தை முடிப்பார்கள். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.
12ம் திருவிழாவான அக்டோபர் 4ம் தேதி காலை 6 மணி, காலை 8 மணி, காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடக்கிறது.
தசரா திருவிழாவின் கடைசி நாட்களில் குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வருவதே பெரிய சவாலாக இருக்கும் என கருதி பக்தர்கள் நேற்று காலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக பக்தர்கள் தங்களுக்கு கிடைத்த இடங்களில் தார்ப்பாய்களை கொண்டு குடில் அமைத்து தங்கி வருகின்றனர்.