குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனமா?: கண்காணிப்பு குழு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!!
மதுரை : குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம் இடம்பெறுகிறதா என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்; திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மைசூருக்கு அடுத்த படியாக தசரா திருவிழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. முத்தாரம்மன் கோவிலில் 12 நாட்கள் தசரா திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன், சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள். கோவில் பாரம்பரியத்தின்படி பக்தர்கள், இளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைத்து வயதினரும் காளி, சிவன், அரசர்கள், குரங்குகள், யமன், புலி, வேடன் காவலர், ஆண்கள், பெண்கள் போன்று தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேடமிடுவர்.
பின்னர் 48 நாட்கள் வரை விரதம் இருந்து பக்தர்களிடம் காணிக்கை பெற்று தசரா இறுதி நாளில் முத்தாரம்மன் கோயிலுக்குச் சென்று காணிக்கையைச் செலுத்துவர். கடந்த 20 ஆண்டுகளாக அதிக காணிக்கை வசூலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சினிமா பாடல்கள் என்ற பெயரில் குத்து பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமான மற்றும் கொச்சையான நடனங்களை ஆடுவது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது.
இதுகுறித்து 2017ல் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, தசரா விழாவில் அரை குறை ஆடைகளுடன் ஆடுபவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இருப்பினும் ஆபாசமான பாடல்களுக்கு ஆடுவது தொடர்கிறது. கடந்த 2023-ல் ஆடல் பாடல் நிகழ்ச்சி தொடர்பான வழக்கில் கோயில் விழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சி, கோயில் தொடர்பானதாக இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதை 2023, 2024 தசரா விழாவில் தசரா குழு பின்பற்றவில்லை. எனவே, தசரா குழுவினர் ஆபாசமான பாடல்கள் பாடவும் ஆடவும் அனுமதிக்க தடை விதித்தும், கடந்த 2023ல் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்து; கலை நிகழ்ச்சியில் பங்கேற்போர் மது அருந்தக்கூடாது. குலசேகரபட்டினம் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், உள்ளூரைச் சேர்ந்த தலா ஒரு முதியவர், இளைஞர், பெண் என 5 பேர் கொண்ட சிறப்புக் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். ஆபாச நடனம் ஆடுவது உள்ளிட்ட விதிமீறல்கள் உள்ளதா? என்பதை இக்குழு ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அக்.9க்கு தள்ளிவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.