தை மாதத்துக்குள் 4,000 கோயில்களுக்கு குடமுழுக்கு; திராவிட மாடல் அரசுதான் பல தேர்களை ஓட வைத்தது: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெருமிதம்
பெரம்பூர்: சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேசுவரர் கோயிலில் 94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அன்னதான கூடம் அடிக்கல் நாட்டும் விழாவில் இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இதன்பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; 900 ஆண்டுகளுக்கு மேல் அருள்தரும் கங்காதரேசுவரர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடந்தேறியது. இந்த திருக்கோயிலை பொறுத்தவரை இதுவரை 19 கோடி ரூபாய் அளவிற்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாள்தோறும் 100 பக்தர்கள் உணவு அருந்த வகையில் அன்னதான கூடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அன்னதான கூடம் 94 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ளது. 3 மாத காலத்தில் பக்தர்களுடைய பயன்பாட்டிற்கு வரும்.
திராவிட மாடல் ஆட்சியில்தான் பல்வேறு கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது வரை மூவாயிரத்து நானூற்றி முப்பத்தி இரண்டு திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இன்றைய தினம் மட்டும் 32 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. வருகின்ற தை மாதத்திற்கு உள்ளாக 4 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு காணப்பட உள்ளது. ஓடாமல் இருந்த பல திருக்கோயில் திருத்தேர்கள் திமுக ஆட்சியில்தான் ஓடியது. அந்த பெருமை திமுகவையே சேரும். 18 ஆண்டுகளுக்கு மேலாக ஓடாமல் இருந்த சிவகங்கை மாவட்டம் கண்டம்தேவி திருக்கோயில் திருத்தேரை ஓட வைத்த பெருமையும் முதலமைச்சரையே சாரும். இவ்வாறு கூறினார்.
அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துவதில் எந்த தவறும் இல்லை என முருகன் கூறுகிறாரே என்ற கேள்விக்கு ‘’இந்தக் கேள்வியை எடப்பாடி பழனிசாமிடம் சென்று தான் கேட்கவேண்டும்’ என்றார். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என அன்புமணி கூறுகிறாரே? தூங்குபவர்களை எழுப்பி விடலாம், தூங்குபவர்கள் போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது. இது தொடர்பாக பதில் அளிப்பதற்காக 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பதில் அளிப்பார்கள். முன்னதாக இந்த நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, மண்டல குழு தலைவர் கூ.பி.ஜெயின், அறநிலையத்துறை சென்னை மாவட்டம் ஒன்று இணை ஆணையர் முல்லை, கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம் கலந்துகொண்டனர்.