கோலாலம்பூரில் இருந்து 137 பேருடன் சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை
சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை, 129 பயணிகள், 8 விமான ஊழியர்கள், 137 பேருடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை 10.40 மணிக்கு தரையிறங்க இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில், சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு, ஒரு இ-மெயில் வந்தது.
அதில், கோலாலம்பூரில் இருந்து, சென்னைக்கு வந்து கொண்டு இருக்கும், மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியதும், குண்டுகள் வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று காலை 10.40 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து நின்றது.
உடனடியாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அதிரடி படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்துக்குள் ஏறி, விமானத்தின் அனைத்து பகுதிகளையும் தீவிரமாக பரிசோதித்தனர். ஒன்றும் கிடைக்கவில்லை. குண்டு மிரட்டல் புரளி என ெதரியவந்தது. விமானம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக நேற்று பகல் 12:40 மணிக்கு சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இச் சம்பவம் குறித்து சென்னை மாநகர சைபர் கிரைம் பிராஞ்ச் போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.