மோதலை தூண்டும் பேச்சு கிருஷ்ணசாமி மகனுக்கு வலை
நெல்லை: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இச்சம்பவத்தை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும் இளைஞரணித்தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, இரு சமூகத்தினரிடையே வன்முறையைத்தூண்டும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது. அதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதன் அடிப்படையில், சந்திப்பு போலீசார் ஷ்யாம் கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இருமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், ஷ்யாம் கிருஷ்ணசாமியை சந்திப்பு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.