கிருஷ்ணகிரியில் தோஷம் கழிப்பதாக கூறி 6 மாத பெண் குழந்தையை கடத்திய இளம்பெண் கைது: ஓசூர் லாட்ஜில் பதுங்கியவர் சிக்கினார்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் ஈஸ்வரி(24). இவருக்கும் கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த நாகேஷ் என்பவருக்கும், 3 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மற்றும் 6 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கர்நாடகாவில் உள்ள நெலமங்களாவில் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன், ஈஸ்வரி கணவர் நாகேசுடன் சண்டை போட்டுக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு வந்து உறவினர்களுடன் ராயக்கோட்டை மேம்பாலம் அடியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அங்கு வந்த ஒரு பெண், எனது ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது, கைக்குழந்தைக்கு ஆடை, விளையாட்டு பொருட்கள் வாங்கி தந்தால், தோஷம் விலகும் என கூறி, குழந்தை மற்றும் ஈஸ்வரியை ஆட்டோவில் அழைத்து சென்று ஆடை, விளையாட்டு பொருட்களை வாங்கி தந்துள்ளார். பின்னர், ஈஸ்வரியை ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் இறக்கி விட்ட அந்த பெண், குழந்தையுடன் அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று, சாமி கும்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால், ஈஸ்வரி கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகாரளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் குழந்தையை கடத்திச்சென்றவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த ஆண்டியூரை சேர்ந்த விஜயசாந்தி(26) என்பது தெரியவந்தது. அவர் குழந்தைக்கு துணி வாங்கிய கடையில், கூகுள்பே மூலம் பணம் அனுப்பிய செல்போன் எண்ணை வைத்து தேடியதில், ஓசூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஓசூர் விரைந்த தாலுகா போலீசார், நேற்று அதிகாலை அங்கிருந்த விஜயசாந்தியை கைது செய்து, குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், விஜயசாந்திக்கு ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டம், பேரணாம்பட்டை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். 2 ஆண்டுக்கு முன், நாட்றாம்பாளையத்தை சேர்ந்த திம்மராஜை 2ம் திருமணம் செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம், பெண் குழந்தை இறந்தே பிறந்தது. இதை மறைத்து கணவரிடம் குழந்தைக்கு தோஷம் இருப்பதால், தந்தை பார்க்க கூடாது எனவும் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், ராயக்கோட்டை மேம்பாலம் அடியில், ஆதரவற்ற பலர் குழந்தைகளுடன் தங்கியிருப்பதை நோட்டமிட்ட விஜயசாந்தி, ஈஸ்வரியை ஏமாற்றி குழந்தையை கடத்திச் சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.