கிருஷ்ணகிரி அருகே 350 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு
*உடன்கட்டை ஏறியவர்களுக்காக நடப்பட்டது
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம் வராகசந்திரம் கிராமத்தில் 350 ஆண்டுக்கு முற்பட்ட 5 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனது.கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு-ஆவணப்படுத்தும் குழு மற்றும் அரசு அருங்காட்சியகம் இணைந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 8 ஆண்டுகளாக வரலாற்றை ஆவணப்படுத்தி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம் வராகசந்திரம் கிராமத்தில் முன்னாள் ஊர் தலைவர் நாராயணப்பா நிலத்தில் 5 நடுகற்கள் புதையுண்டு கிடப்பதாக கபிலன் என்பவர் கொடுத்த தகவலின்பேரில், ஆலோசகர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், மண்ணில் புதைந்திருந்த 5 நடுகற்கள் குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டரின் உத்தரவின்பேரில், தாசில்தார் ரமேஷ், ஆர்.ஐ. ராமநாதன் ஆகியோர் நில உரிமையாளரின் அனுமதியின்பேரில், பாதுகாப்பற்று, பராமரிப்பின்றி கிடந்த 5 நடுகற்களை மீட்டு மாவட்ட அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காப்பாட்சியர் சிவக்குமார் கூறியதாவது: இந்த நடுகற்கள் 350 ஆண்டுக்கு முற்பட்டவையாகும். அப்போது நடந்த சண்டையில் இறந்த வீரர்கள் மற்றும் அவர்களுடன் உடன்கட்டை ஏறிய அவர்களது மனைவிகளுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களாகும். இதில், சிறப்பு வாய்ந்தது குதிரை வீரரின் நடுகல்லாகும். வீரன், குதிரையின் மீதமர்ந்து கம்பீரமாய் வாளை ஓங்கி சண்டையிடும் பாவனையில் காட்டப்பட்டுள்ளான். அருகில் ஒருவன் குதிரையை பிடித்துள்ளான்.
மற்றவன் தன் கையில் கண்ணாடியை பிடித்துள்ளான். குடை, கொடி, சாமரம், விசிறி போன்ற கண்ணாடியும் தலைவனைக் குறிக்கும் அடையாளமாகும். கோயில்களில் இறைவனுக்காக காட்டும் 16 மங்கலப் பொருட்களுள் கண்ணாடியும் ஒன்றாகும். அருகே அவனது மனைவி வாழைப்பழம் போன்ற ஒரு பொருளை கையில் வைத்துள்ளார். எனவே, போரில் இறந்த முக்கிய தலைவருக்கும், அவனுடன் இறந்த மனைவிக்குமான நடுகல் என்று இதனை கூறலாம்.
அடுத்த நடுகல்லில் ஒரே மாதிரி இரண்டு வீரர்கள் ஒரு கையில், குறுவாளும் மற்ற கையில் வாளை ஓங்கிய நிலையிலும் காட்டப்பட்டுள்ளனர். அருகே அவர்களுடன் உடன்கட்டை ஏறிய மனைவியரும் காட்டப்பட்டுள்ளனர். அடுத்த நடுகல்லில் இரண்டு வீரர்கள் ஒன்று போலவே ஒரு கையில் வாளும், மறுகையில் கேடயத்தையும் கொண்டு போருக்கு செல்லும் கோலத்தில் காட்டப்பட்டுள்ளனர்.
அடுத்த நடுகல்லில் வீரன் ஒருவன் கையில் வாள் மற்றும் குறுவாளுடன் போர் கோலத்தில் காட்டப்பட்டுள்ளான். 5வது நடுகல்லில் ஒரு பெண் ஒரு கையில் மதுக்குடுவை மற்ற கையில் வாழைப்பழம் போன்ற பொருளுடன் காட்டப்பட்டுள்ளார்.
இவருக்குப் பின்னாள் ஒரு வளைவு காட்டப்பட்டிருக்கிறது. இதே போன்ற வளைவு தனியே உள்ள வீரனுக்கும் காட்டப்பட்டுள்ளதால், இவ்விருவரும் கணவன் -மனைவியாக இருக்கலாம்.
பொதுவாக இருவரையும் தனித்தனிக் கல்லில் வடிப்பது அரிதானதாகும். இந்த ஐந்து நடுகற்களும் ஒரே இடத்தில் காணப்படுவதோடு, ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த கலை அமைதியில் காணப்படுவதாலும், கல்வெட்டுச் சான்று இல்லையென்றாலும், ஒரே போரில் இறந்த வீரர்களுக்கானவை என்பது தெரிய வருகிறது.
இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலையில் நடுகற்கள், தொல் பொருட்கள் இருந்தால் 86809 58340 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது, குழு தலைவர் நாராயணமூர்த்தி, விஜயகுமார், பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், கடலரசு மூர்த்தி, பணியாளர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.