கோயம்பேடு சிறப்பு சந்தையில் சூடு பிடிக்கும் வியாபாரம்: சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வியாபாரிகள் கோரிக்கை
அண்ணாநகர்:ஆயுதபூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் சிறப்பு சந்தை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த சந்தை வரும் 5ம் தேதி வரை நடக்கிறது. இந்த சந்தையில் பொரி, கடலை, வாழைப்பழம், வாழை இலை, தேங்காய், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை விற்பனை செய்ய தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும், வியாபாரிகளுக்கு குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்து தரப்படும் எனவும் அங்காடி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து, பெண்களுக்கு தனி கழிவறை மற்றும் வியாபாரிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் சிறப்பு சந்தையில் இன்று காலை பொருட்களை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள், பூஜை பொருட்களை குறைந்த விலையில் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பூ, பழ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு செய்து அதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு சிறப்பு சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபாரம் செய்யாமல் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பொரி, கடலை போன்ற பொருட்களை விற்பனை செய்ததால் மொத்த வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதுபோல் சம்பவம் நடக்காதவாறு அங்காடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை அங்காடி நிர்வாகம் நியமிக்க வேண்டும். கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் ஆக்கிரமித்து வியாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்கள் வியாபாரம்தான் சூடுபிடிக்கும். எனவே சிறப்பு சந்தைக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து பொதுமக்கள் சிரமம் இன்றி பொருட்களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.