கோயம்பேடு ஜெய் பார்க்கில் ஆக்கிரமிப்பு வாகனங்கள் அகற்றம்: உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு ஜெய் பார்க் அருகே தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த நிலையில், கோயம்பேடு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் எஸ்.பி.சுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். இதன்பின்னர் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
அப்போது வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ‘’இனிமேல் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்தனர். போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘’ஜெய்நகர் பார்க் அருகே சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுசம்பந்தமாக வந்த புகாரையடுத்து சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தி உள்ளோம். மீண்டும் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் உடனடியாக போலீசில் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.