மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கோயம்பேடு ரயில் நகர் தரைப்பாலம் மூடல்: ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை
அண்ணாநகர்: சென்னையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கோயம்பேடு ரயில் நகர் பகுதியில் தரைப்பாலம் மீது மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக மக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரும்பு தடுப்புகளை வைத்து கோயம்பேடு போலீசார் மூடியுள்ளனர். இருப்பினும் தடுப்புகளை தாண்டி பொதுமக்கள் தரைப்பாலத்தை கடந்து செல்வதால் தற்போது போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவ்வழியாக வாகனங்கள் செல்லாதபடி மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல், மதுரவாயல் ஓம்சக்தி நகர் தரைப்பாலமும் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; கோயம்பேடு ரயில் நகர் பகுதியில் தரைப்பாலம் மீது மழைநீர்பெருக்கெடுத்து ஓடுவதால் ஆபத்தை உணராமல் தரைப்பாலம் மீது வாகனங்களில் செல்கின்றனர். இதனால் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுவித்து வருகின்றனர். இதனால் போலீசாருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு கூறினர்.