கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய 16 சிறுவர்கள் மீட்பு: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் வேலை செய்துவருவதாக சைல்டு லேபர் இன்ஃபோஸ்மென்ட் துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதன்படி, நேற்று சைல்டு லேபர் இன்ஃபொஸ்மென்ட் உதவி ஆணையர் பழனி தலைமையில், 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காய்கறி, பூக்கள், பழம் மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு பணியாற்றி வந்த 16 சிறுவர்களை மீட்டனர். அப்போது அதிகாரிகளை சுற்றிவளைத்துக்கொண்டு வியாபாரிகள் கடும் வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுசம்பந்தமாக அதிகாரிகள் கொடுத்த தகவல்படி, கோயம்பேடு போலீசார் வந்து அதிகாரிகளிடம் வாக்கு வாதம் செய்த வியாபாரிகளை சமாதானப்படுத்தினர். இதன்பின் மீட்கப்பட்ட 16 சிறுவர்களை கோயம்பேடு காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து சைல்டு லேபர் இன்ஃபொல்மென்ட் அதிகாரிகள் கூறியதாவது;
கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான சிறுவர்கள் வேலை செய்வதாக புகார்கள் வந்ததையடுத்து தற்போது 16 சிறுவர்களை மீட்டுள்ளோம். அதிகாரிகளை பார்த்ததும் பெரும்பாலான சிறுவர்கள் ஓடிவிட்டனர். கூலி தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் சம்பளம் கொடுக்காமல் வேலை வாங்கினாலும் 8 மணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கினால் எங்களிடம் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும் நபர்களின் பெயர், விவரம் பாதுகாக்கப்படும். சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு கூறினர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் மீட்கப்பட்ட 16 சிறுவர்களும் ராயபுரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.