கோவளம் முகத்துவாரத்தில் ரூ.471 கோடியில் 4,375 ஏக்கர் நிலத்தில் புதிய நீர்த்தேக்கம்: டிசம்பர் 1ம் தேதி முதல்வர் அடிக்கல்
திருப்போரூர்: கோவளம் முகத்துவாரத்தில் ரூ.471 கோடி மதிப்பில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை, டிரம்பர் 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையை ஒட்டி புதிய நீர்த்தேக்கம் ஒன்றை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து, சட்டமன்றத்தில் அதற்கான அறிவிப்பை கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட்டது. வருகிற 2035ம் ஆண்டுக்குள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 35 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும் என்பதால் கூடுதல் நீராதாரங்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை நீர்வளத்துறை கணக்கிட்டு அரசுக்கு அறிக்கை அளித்தது.
பருவமழைக் காலங்களில் ஏரிகள் மற்றும் பல்வேறு நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் ஓ.எம்.ஆர். சாலை மற்றும் இ.சி.ஆர். சாலை ஆகியவற்றுக்கு நடுவில் அமைந்துள்ள பக்கிங்காம் கால்வாய் வழியாக முட்டுக்காடு முகத்துவாரத்திற்குச் சென்று கடலை அடைகிறது. இந்த, நீர் வீணாக கடலில் செல்வதாகவும், இந்த நீரை தேக்கி வைத்தால் சுற்றுப்புற பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தனியார் வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் எப்போதும் தண்ணீர் கிடைக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவித்தன. செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி முட்டுக்காடு முகத்துவாரம் உள்ளது.
இதையொட்டி கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளில் தமிழ்நாடு அரசின் உப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான 4,375 ஏக்கர் நிலத்தில் நீர்த்தேக்கம் ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு உப்பு நிறுவனத்திடம் இருந்து நீர்வளத்துறைக்கு இந்த நிலம் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் ரூ.471 கோடி மதிப்பில் கேளம்பாக்கம், கோவளம், முட்டுக்காடு ஆகிய மூன்று கிராமங்களை ஒன்றிணைத்து, முட்டுக்காடு முகத்துவாரத்தை ஒட்டி நீர்த்தேக்கத்தை அமைக்க தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய நீர்த்தேக்கத்திற்கு வரும் டிசம்பர் 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பொழுதுபோக்கு மையம்
அடிக்கல் விழா அன்று திருப்போரூர் அருகே இள்ளலூர் கிராமத்தில் தனியார் நிறுவனமான வொன்டர்லா சார்பில், ரூ.380 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வொன்டர்லா சென்னை என்ற பொழுதுபோக்கு மையத்தையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.