கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை நிராகரித்தது ஒன்றிய அரசு!!
சென்னை : தமிழ்நாடு அரசு அனுப்பிய கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போதிய மக்கள் தொகை இல்லாத காரணத்தால் இந்த இரண்டு மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகளையும் நிராகரித்து மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. கோவை மாநகரில் ரூ. 10,740.49 கோடியில் 34.8 கி.மீ. தொலைவுக்கும், மதுரை மாநகரில் ரூ. 11,368.35 கோடியில் 32 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக இந்த இரண்டு திட்ட அறிக்கைகளும் அனுப்பி வைக்கப்பட்டு, பல மாதங்களாக நிலுவையில் இருந்தன. இந்த திட்ட அறிக்கையில், மத்திய அரசு கோரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்டன. இந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி அளிக்க குறைந்தது 20 லட்சம் மக்கள் தொகை தேவை என்றும், கோவை மற்றும் மதுரையில் 15 லட்சம் மக்கள்தொகை மட்டுமே இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது என்று மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மக்கள் தொகை குறைவாகவுள்ள ஆக்ரா, நாக்பூர், புணே, கான்பூர் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.