கோத்தகிரி நகர் பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்க கோரிக்கை
கோத்தகிரி : கோத்தகிரி நகர் பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மூலம் முறையாக குப்பை தொட்டிகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் சாலையிலேயே குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.கோத்தகிரி நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு கிராம மக்கள் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்களை கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் மூலம் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டு நாள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது.
இதில் குறிப்பாக ராம்சந்த்,கிளப் ரோடு,சக்திமலை செல்லும் சாலை, குப்பட்டிகம்பை, டானிங்டன், காமராஜர் சதுக்கம் ஆகிய பகுதிகளில் கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட வேண்டிய குப்பை தொட்டிகள் கடந்த சில நாட்களாக வைக்கப்படாததால் பொதுமக்கள் சாலைகளிலேயே குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.
இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குப்பை தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.