கோத்தகிரி அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு தடையை மீறி செல்லும் சுற்றுலா பயணிகள்
கோத்தகிரி : கோத்தகிரியில் தடைசெய்யப்பட்ட கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு ஆபத்தை உணராமல் செல்லும் சுற்றுலா பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதி கேத்தரின் நீர்வீழ்ச்சி ஆகும்.
இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலா துறையின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த நீர் வீழ்ச்சிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு நீர் வீழ்ச்சியின் காட்சி முனையை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறை மூலமும், காவல்துறை மூலமும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று கரடி, காட்டு மாடு இருக்கும் பகுதிகளை கடந்து தனியார் தேயிலை தோட்டம் வழியாக நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்கின்றனர்.
ஆனால் நீர்வீழ்ச்சி பகுதியில் எவ்வித பாதுகாப்பு வளையங்களோ, சாலை வசதி இல்லாத நிலையில் வனத்துறையினரின் கண்களை கட்டி ஆபத்தான அப்பகுதிக்கு செல்கின்றனர்.
அங்கு சென்று தடைசெய்யப்பட்ட குளிர்பான பாட்டில்கள், மது பாட்டில்கள் உடைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை வனத்துறையினர் கேட்டால் நாங்கள் சமூக வலைத்தளங்களில் பார்த்து வந்துள்ளோம். இங்கு நாங்கள் ஊராட்சி மன்ற நுழைவு கட்டணம் மற்றும் வாகனம் நிறுத்துவதற்கு ரசீது பெற்று வருகிறோம் என வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
எனவே பாதுகாப்பற்ற நீர்வீழ்ச்சி பகுதியில் குளிக்க தடைசெய்யப்பட்டு இருக்கும் நிலையில் குறிப்பாக நீர்வீழ்ச்சி அமையப்பெற்றுள்ள பகுதியில் பல உயிர் சேதங்கள் கடந்த ஆண்டுகளில் நடைபெற்றுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறை உடனே நடவடிக்கை மேற் கொண்டு தடை செய்யப்பட்ட பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.