பள்ளிப்பட்டில் 70 மிமீ மழை பதிவு: கொசஸ்தலை ஆற்றில் தற்காலிக பாலம் துண்டிப்பு
திருத்தணி: பள்ளிப்பட்டு பகுதிகளில் நேற்றிரவு தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, அதிகபட்சமாக 70 மிமீ மழை பொழிவு பதிவாகியுள்ளது. மேலும், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் கரை புரண்டு ஓடிவருவதால், அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, மலைப் பகுதிகளில் இருந்து காட்டாற்று வெள்ளம் மற்றும் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்தில் இருந்து அதிகபட்ச உபரிநீர் திறப்பால், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள தரைப்பாலங்கள் வெள்ளநீரில் மூழ்கிவிட்டன. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டியில் 70 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஆர்கே பேட்டை 54 மிமீ, திருத்தணி 51 மிமீ, திருவாலங்காட்டில் 41 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இதனால் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால், சாமந்தவாடா பகுதியில் உள்ள தற்காலிக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டு வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டதால், சாமந்தவாடா, ஞானம்மாள் பட்டடை கிராமங்களில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, சாமந்தவாடா பகுதியில் கொசஸ்தலை ஆற்று வெள்ளநீரில் சேதமடைந்த தரைப்பாலத்தை முழுமையாக அகற்றி, அங்கு உயர்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். எனினம், அதற்கான திட்ட மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து அரசுக்கு அனுப்புவதில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இங்கு உயர்மட்ட பால பணிகளை துவக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.