கொரியா மகளிர் டென்னிஸ் இகா ஸ்வியடெக் மெகா வெற்றி: ஏகதெரினாவுடன் இன்று பைனலில் மோதல்
சியோல்: கொரியா ஓபன் மகளிர் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் நேற்று, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தென் கொரியா தலைநகர் சியோலில் கொரியா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் காலிறுதிப் போட்டி ஒன்றில் செக் வீராங்கனை பார்போரா கிரெஜ்சிகோவாவை வீழ்த்தி, இகா ஸ்வியடெக் அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசனை வீழ்த்தி, ஆஸ்திரேலியா வீராங்கனை மாயா ஜாய்ன்ட் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில், நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் இகா ஸ்வியடெக், மாயா ஜாய்ன்ட் மோதினர். துவக்கம் முதல் அபாரமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய இகா, முதல் செட்டில் ஒரு புள்ளி கூட எடுக்க விடாமல், 6-0 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் சிறப்பாக ஆடிய இகா, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் அதை கைப்பற்றினார்.
அதனால், 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 2வதாக நடந்த அரை இறுதிப் போட்டியில் செக் வீராங்கனை கேதரீனா சினியகோவா, ரஷ்ய வீராங்கனை ஏகதெரினா அலெக்சாண்ட்ரோவா மோதினர். அந்த போட்டியில் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ஏகதெரினா, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து, இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் ஏகதெரினாவுடன் இகா மோதுவார்.