கொரியா ஓபன் மகளிர் டென்னிஸ் யாங், யிஃபான் இணை அரை இறுதிக்கு தகுதி
சியோல்: கொரியா ஓபன் மகளிர் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, சீனாவின் யிஃபான் ஸு, யாங் ஸாவோஸவான் இணை அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. தென் கொரியாவின் சியோல் நகரில் கொரியா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் மட்டுமே பங்குபெறும் இப்போட்டிகளின் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போடடிகள் நேற்று நடந்தன.
முதல் போட்டியில் சீன வீராங்கனைகள் யிஃபான் ஸு, யாங் ஸாவோஸவான் இணை, நார்வே வீராங்கனை உல்ரிகே பியா எய்கேரி, சீனாவின் டாங் கியான்ஹுய் இணையுடன் மோதியது. இந்த போட்டியின் துவக்கம் முதல் யிஃபான், யாங் இணையே ஆதிக்கம் செலுத்தியது. அபாரமாக ஆடிய அவர்கள், 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினர்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வீராங்கனை மாயா ஜாய்ன்ட், அமெரிக்க வீராங்கனை கேதரின் மெக்னல்லி இணை, இந்தோனேஷியாவின் அல்டிலா சட்ஜியாடி, மெக்சிகோ வீராங்கனை கியுலியானா மரியோன் ஒல்மாஸ் இணையுடன் மோதியது. இந்த போட்டியில் இரு இணைகளும் சளைக்காமல் போராடினர். கடைசியில், 6-7 (4-7), 6-4, 10-8 என்ற செட் கணக்கில் ஜாய்ன்ட், மெக்னல்லி இணை வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.