கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் ஜேஸ்லினை எளிதில் வீழ்த்தி வியக்க வைத்த நொஸோமி
இக்சான்: கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் நேற்று, ஜப்பான் வீராங்கனை நொஸோமி ஒகுஹரா, வியட்நாம் வீராங்கனை குயென் துய் லின் அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினர். கொரியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் கொரியாவின் இக்சான் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டி ஒன்றில், ஜப்பான் வீராங்கனை நொஸோமி ஒகுஹரா, சிங்கப்பூர் வீராங்கனை ஜேஸ்லின் ஹூய் யான் மோதினர்.
துவக்கம் முதல் எவ்வித சிரமமும் இன்றி அநாயாசமாக ஆடிய நொஸோமி, 21-5, 21-10 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் வியட்நாமின் குயென் துய் லின், தைவான் வீராங்கனை ஹான் யு சென் மோதினர். இப்போட்டியில் அதிரடியாக ஆடிய குயென் 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று, கொரியா வீரர் ஜியோன் ஹியோக் ஜின், ஜப்பான் வீரர் கூ டகாஹஷி மோதினர். இப்போட்டியில் ஜியோன், சிறப்பாக ஆடி, 21-8, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.