கொல்லிமலையில் கனமழை; ஆர்ப்பரித்து கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி: ஆபத்தை உணராத சுற்றுலா பயணிகளால் அதிர்ச்சி
குறிப்பாக கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், 300 அடி உயரத்திற்கு மேல் பாறையின் நடுவில் இருந்து, கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு அதிக ஆர்வம் கட்டுவார்கள். கொல்லிமலையில் தினமும் பலத்த மழை பெய்து வருவதால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது. கோயிலூர் பெரிய ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. தண்ணீர் முழுவதும் அப்படியே ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அருகில் சென்று குளிக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. அருகில் உள்ள தடாகத்தில் சென்று சாரலில் நனைந்து வருகின்றனர். பாறையில் இடுக்குகளில் லேசாக கொட்டும் தண்ணீரில், குளித்துவிட்டு மேலே வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் அதிக அளவில் மாணவர்களும் இளைஞர்களும் கொல்லிமலைக்கு சுற்றுலா வருகின்றனர் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அதன் அருகே உள்ள பாறையின் மீது ஏறி போட்டோ எடுத்து வருகின்றனர். கால் தவறி விழுந்தால் 100 அடி பள்ளத்தில் விழ வேண்டும். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர், சுற்றுலா பயணிகளை அருகில் உள்ள பாறையின் மீது ஏறி செல்பி போட்டோ எடுக்கக்கூடாது என எச்சரித்தும், இளைஞர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.