கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (06.11.2025) சென்னை கொளத்தூர், பூம்புகார் நகரில் கட்டப்பட்டு வரும் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடம் மற்றும் இராஜாஜி நகரில் கட்டப்பட்டு வரும் மூத்த குடிமக்கள் உறைவிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் சென்னை, கன்னியாகுமதி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு தரப்பட்டு பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
இக்கல்லூரிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 2,000 க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரிகள் அதிக கட்டணம் கொடுத்து படிக்க இயலாத மாணவச் செல்வங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்கின்றது.
கொளத்தூர், அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது கடந்த 4 ஆண்டுகளாக எவர்வின் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது 800 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரி மாணவர்களுக்கு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் மூலம் கல்விக் கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்கள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பயின்று பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் வளாக நேர்காணல் மூலம் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்று ரூ.30,000 முதல் ரூ.70,000 வரை ஊதியம் பெற்று வருகின்றனர்.
இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடமானது கட்டும் வகையில் முதலமைச்சரால் கட்டுமானப் பணிகள் 2024 டிசம்பரில் தொடங்கி வைக்கப்பட்டன. இக்கட்டத்தில் 24 வகுப்பறைகள், ஆய்வகங்கள், கூட்டரங்குகள், நூலகம், உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் கல்வியாண்டில் இக்கல்லூரியானது புதிய கட்டடத்தில் செயல்படும். இரண்டாவது கட்டமாக சுமார் 2,500 மாணவ செல்வங்கள் படிக்கின்ற அளவிற்கு வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகளும், தங்கும் விடுதி, விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.
காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயில் தங்கப் பல்லி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரில் உண்மை தன்மை இருந்தால் அதன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். இது குறித்த விளக்கத்தை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் அவர்கள் அறிக்கையாக அளிப்பார்.
நயினார் நாகேந்திரின் மகன் மீது பதியப்பட்டிருக்கின்ற வழக்கு தன் குடும்பம் வாழ வேண்டும் என்பதற்காக அவருடைய சட்ட மீறலுக்காக பதியப்பட்ட வழக்கா அல்லது கட்சிக்காக பதியப்பட்ட வழக்கா என்பதை அவரே தெரிவிக்க வேண்டும். குற்றங்கள் நடக்கும் போது தடுப்பது ஒரு வகை, நடந்த குற்றங்களுக்கு நடவடிக்கை என்பது மற்றொரு வகையாகும். இந்த ஆட்சி குற்றங்களை தடுக்கின்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றது. கோவை சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கினை 30 நாட்களுக்குள் நடத்தி முடித்து அதற்குரிய தண்டனையை பெற்று வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது சட்டத்தின் ஆட்சி. ஆகவே குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தப்பிப்பதற்கு ஏதாவது முயற்சி எடுத்தால் கேளுங்கள், நடந்த சம்பவம் இனி நடக்கக்கூடாது என்பதில் இந்த ஆட்சி உறுதியாக இருக்கின்றது. மணிப்பூரை போல் கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இந்த ஆட்சி உறங்கிக் கொண்டிருக்கவில்லை.
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரை என்று ஒரு பழமொழி உண்டு. எந்த பிரச்சனையுமே கையில் கிடைக்காதவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கையில் எடுத்து ஆடுவது தேர்தலை மையப்படுத்தி செய்கின்ற ஒரு போராட்டமே தவிர இது உண்மை இல்லை என்று போராட்டம் செய்பவர்களுக்கே தெரியும். எந்த குற்ற சம்பவம் நடந்தாலும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. பாஜகவின் போராட்டம் அரசியலுக்காக போடுகின்ற வேடம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் பொ. பெரியசாமி, கூடுதல் ஆணையர் சி. ஹரிப்ரியா, அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன், இணை ஆணையர்கள் சு. மோகனசுந்தரம், பெ.க.கவெனிதா, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார், துணை ஆணையர் இரா ஹரிஹரன், கண்காணிப்பு பொறியாளர் பழனி, செயற்பொறியாளர் மகேஷ்பாபு, மாநகராட்சி உறுப்பினர் நாகராஜன், ஐ.சி.எப்.முரளி, சந்துரு, மகேஷ்குமார், கல்லூரி முதல்வர் சி.லலிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.