ஆவணங்களுக்காக கோடநாடு கொலை நடந்தது: டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி
சென்னை; ஆவணங்களுக்காக கோடநாடு கொலை நடந்தது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; பழனிசாமி தலைமையிலான கூட்டணி நிச்சயம் தேர்தலில் வெல்லாது. தேர்தலில் பழனிசாமிக்கு 3ஆவது இடம்தான் கிடைக்கும். பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக்கினால் வெற்றிபெற முடியாது என கிஷன் ரெட்டியிடம் கடிதம் அளித்தேன். தலைமை பொறுப்புக்கு சற்றும் தகுதி இல்லாத நபர் எடப்பாடி பழனிசாமி.
தன்னை விமர்சித்தவர்களை கூட கட்சியில் சேர்த்து அரவணைத்தார் ஜெயலலிதா. ஆர்.எம்.வீரப்பன், பா.வளர்மதி ஆகியோர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியவர்கள்தான். பழனிசாமியின் மீதுள்ள அதிருப்தியால் அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுகின்றனர் எடப்பாடி என்ற துரோக சக்தி 2026 தேர்தலில் வீழ்த்தப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டும். சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு எஸ்.ஐ.ஆர் பணிகளை தமிழகத்தில் தொடரலாம். எஸ்.ஐ.ஆர் விண்ணப்பத்தில் கேட்கப்படும் கேள்விகளில் எனக்கே குழப்பம் வருகிறது.
சாமானிய மக்களுக்கு எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படும். சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தள்ளிப்போட வேண்டும் என்று கூறினார். கூட்டணிக்கு தவெக அழைத்ததா என்ற கேள்விக்கு அதெல்லாம் சொல்ல முடியாது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பற்றிய ரகசிய ஆவணங்கள் போயஸ் கார்டனில்தான் இருந்தன. போயஸ் கார்டனில் இருந்து கோப்புகளை ஒருபோதும் நான் அரசியலுக்காக பயன்படுத்த நினைத்ததில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அமைச்சர்கள் குறித்த கோப்புகளை நாங்கள் கிழித்து எறிந்துவிட்டோம். போயஸ் கார்டனில் ஆதாரங்கள் அடங்கிய ஃபைலை நானும் மருத்துவர் வெங்கடேஷும் கிழித்து எறிந்துவிட்டோம்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரின் வண்டவாளங்கள் அந்த ஃபைலில் இருந்தன. என்னை கட்சியில் இருந்து நீக்கிய பிறகு, ஆதாரங்களை நான் வெளியிட்டுவிடுவேனோ என பழனிசாமி பயந்தார். ஆவணங்களை ஒருபோதும் நான் வெளியிட நினைத்ததில்லை; ஆனால் எடப்பாடியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன். தங்களை பற்றி ரகசிய ஆவணங்கள் கோடநாடு பங்களாவில் இருப்பதாக நினைத்து ஆள் வைத்து தேடியுள்ளார் பழனிசாமி. ஆவணங்களை தேடி கோடநாடு பங்களாவுக்கு சென்றதன் காரணமாகவே அடுத்தடுத்து கொலைகள் நடந்தன என்று கூறினார்.