கொடநாடு காட்சி முனை அருகே குட்டியுடன் முகாமிட்ட காட்டு யானைகள்
கோத்தகிரி : கொடநாடு காட்சி முனையின் கீழ் பகுதியில் குட்டியுடன் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ரெட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கொடநாடு. இங்குள்ள காட்சி முனை சுற்றுலா துறையால் அங்கீகரிக்கப்பட்டது. இங்கு வார விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, வார நாட்களிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது சமவெளிப் பகுதிகளில் நிலவும் வெயிலின் தாக்கம் காரணமாக தெங்குமரஹாடா, அல்லி மாயார், கல்லாம்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொடநாடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் முதல் பெய்த மிதமான மழையால் காட்சி முனைக்கு அருகில் உள்ள தாழ்வான வனப்பகுதிகளில் பசுமை நிறைந்து காணப்படுகிறது.
இதனால் குட்டிகளுடன் கொடநாடு காட்சி முனை பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதனை காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் யானைக்கூட்டத்தையும் கண்டு ரசித்தனர்.