கொடைக்கானலில் பலத்த காற்று மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல்: வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல் இன்றிரவு கரை கடக்கிறது. இதனால், தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்றுடன், அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் ஒன்றான பூம்பாறை-மன்னவனூர் மலைச்சாலையின் குறுக்கே, இன்று காலை மரம் முறிந்து விழுந்தது. இதனால், சாலையை கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் வராததால், பொதுமக்களை மரத்தினை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதேபோல, கூக்கால் மலைக்கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. மேலும், அருகில் சென்ற மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இந்த மரத்தையும் பொதுமக்களே அகற்றினர். மின்வாரிய அதிகாரிகள் அறுந்து விழுந்த மின்வயர்களை சீரமைத்து வருகின்றனர். எனவே, மலைக்கிராமங்களுக்கு செல்லும் சாலையில் இருக்கும் ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.