கொடைக்கானலில் திடீர் நிலப்பிளவு: குடிநீர் கிடைக்காமல் மக்கள் பரிதவிப்பு
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலையில் கடைக்கோடி மலைக்கிராமமாக உள்ளது கிளாவரை. இவ்வூரின் ஒரு பகுதி கீழ் கிளாவரை என்றும், மற்றொரு பகுதி மேல் கிளாவரை என்றும் அழைக்கப்படுகிறது. இதில் கீழ் கிளாவரையை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள செருப்பன் ஓடையில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். இந்த ஓடை வழியாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் குழாய் செல்கிறது.
கடந்த ஆண்டு கீழ் கிளாவரைக்கு குழாயில் தண்ணீர் வராததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து அப்பகுதியினர் செருப்பன் ஓடை பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள குழாயில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டுள்ளதா என சென்று பார்த்தனர். அப்போது கூனிபட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு மிகப்பெரிய நிலப்பிளவு ஏற்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நிலப்பிளவு ஏற்பட்டதற்கு நில அதிர்வா அல்லது வேறு ஏதேனும் காரணமா என ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் இந்திய புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர். அதில், ஓடை தண்ணீர் புகுந்த காரணத்தினால் நிலப்பிளவு ஏற்பட்டதாகவும், இதுபற்றி பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். தற்போது அப்பகுதியில் மீண்டும் கூடுதலாக சுமார் 200 அடி அளவிற்கு நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்த நிலப்பிளவு காரணமாக இந்த பகுதிக்கு செல்லக்கூடிய ஓடை நீரும் செல்லாமல் தடைபட்டு இருப்பதால் அப்பகுதி மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.