கொடைக்கானல் அருகே மயங்கி விழுந்த தாய் யானையின் அருகில் நின்று குட்டி யானை பாசப் போராட்டம்: கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை
கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே, மயங்கி விழுந்த தாய் யானை அருகே, நின்ற குட்டியானை யாரையும் நெருங்கவிடாமல் பாசப் போராட்டம் நடத்தியது. பின்னர் ஒருவழியாக இருவரையும் பிரித்து தாய் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதியில் யானைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இவைகள் உணவு, தண்ணீருக்காக மலைக்கிராமங்களில் அவ்வப்போது புகுந்துவிடுகின்றன.
இந்நிலையில், கொடைக்கானல் அருகே, வில்பட்டி ஊராட்சி, பள்ளங்கி கோம்பை வனப்பகுதியில் பெண் யானை ஒன்று தனது குட்டியுடன் கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்தது. இந்த யானை நேற்று கணேசபுரத்தில் உள்ள செல்வம் என்பவரது தோட்டத்தில் திடீரென மயங்கி விழுந்தது. அதன் அருகில் நின்ற குட்டி ஆண் யானை செய்வதறியாது அங்கும், இங்கும் அலைந்து பாசப் போராட்டம் நடத்தியது. தகவலின் பேரில் வந்த வனத்துறையினர் மயங்கி விழுந்த யானையை நெருங்க முயன்றனர். ஆனால், குட்டி யானை நெருங்கவிடாமல் மிரட்டியது.
கொடைக்கானலில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ள இந்த பகுதிக்கு நேற்று மாலை கால்நடை மருத்துவர்கள் வந்தனர். பின்னர் தாய் யானையிடம் இருந்து குட்டி யானையை ஒருவழியாக பிரித்தனர். தாய் யானையை நேற்று நள்ளிரவு முழுவதும் கண்காணித்து 10 மணி நேரத்துக்கும் மேலாக சிகிச்சை அளித்து வருகின்றனர். குட்டி யானை மற்றொரு இடத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தாய் யானை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாய் யானையை விட்டுப்பிரியாத குட்டி யானையின் பாசப் போராட்டம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.