கொடைக்கானலில் நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்த சொகுசு கார்: கேரள பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
கொடைக்கானல்: கொடைக்கானலில் கட்டுப்பாட்டை இழந்த கேரள சொகுசு கார், நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. காரில் இருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்தில் வாரவிடுமுறையான நேற்று கூட்டம் களைகட்டியது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இவர்கள் நகரில் உள்ள குணா குகை, பில்லர் ராக், பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம், கோக்கர்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா இடங்களை கண்டுரசித்தனர்.
இந்நிலையில், கேரள மாநிலம், பாலக்காடு பகுதியிலிருந்து கல்லூரி மாணவர்கள் 3 பேர், 2 பெண்கள் என 5 பேர் சொகுசு காரில் நேற்று கொடைக்கானல் வந்தனர். பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்த இவர்கள் நேற்று மாலை மீண்டும் தங்கும் விடுதிக்கு திரும்பினர். அப்போது அப்பர் லேக்வியூ சாலையில் எதிரே வந்த டூவீலருக்கு வழிவிட ஒதுங்கியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் நடுரோட்டில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த பெண் உட்பட 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் காயமின்றி தப்பினர். அப்பகுதியிலிருந்த வியாபாரிகள் காரில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.