கொடைக்கானல் அருகே புலி தாக்கி குதிரை பலி
*பொதுமக்கள் பீதி
கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே குதிரையை புலி தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிராம மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர்.
கொடைக்கானலை சுற்றியுள்ள மேல்மலை, கீழ்மலை கிராமங்களை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டு மாடு, யானை, காட்டுப்பன்றி சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவைகள் அவ்வப்போது விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
சில சமயங்களில் பொதுமக்கள், விவசாயிகளையும் தாக்குகின்றன. மேலும், கொடைக்கானல் நகரில் அவ்வப்போது உலா வரும் காட்டு மாடுகள் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகளை அச்சுறுத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, கொடைக்கானல் மேல்மலை கூக்கால் ஊராட்சிக்குட்பட்ட பழம்புத்தூரை சேர்ந்த கோவிந்தராஜன், தான் வளர்த்த குதிரையை வீட்டருகே கட்டி வைத்துள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது குதிரையை காணவில்லை.
அக்கம்பக்கத்தில் தேடியபோது, கட்டி வைத்த இடத்தில் இருந்து 100 அடி தூரத்தில் குதிரையில் உடல் பகுதி சிதைந்த நிலையில் இறந்து கிடந்தது.
அதனருகே புலியின் கால் தடம் பதிவாகி இருந்தது. உடனே இதுகுறித்து வனத்துறைக்கு கோவிந்தராஜன் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்வையிட்டு புலி தாக்கி குதிரை இறந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் கட்டி வைத்த குதிரையை புலி அடித்து கொன்ற சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.