கொடைக்கானலில் மலைப்பூண்டு விலை கடும் வீழ்ச்சி: உரிய நேரத்தில் மழை பெய்யாததால் விளைச்சல் பாதிப்பு
திண்டுக்கல்: மலைப்பூண்டு விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மேல்மலை கிராமங்களில் மலைப்பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. புவிசார் குறியீடு பெற்ற இந்த மலைப்பூண்டு கடந்த மாதத்தில் கிலோ ரூ.400 முதல் ரூ.650 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில், மலைப்பூண்டின் விலை கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை என குறைந்துள்ளது. உரிய நேரத்தில் மழை பெய்யாததால் விளைச்சல் குறைந்துவிட்டதாக தெரிவித்த விவசாயிகள், சந்தைகளில் கலப்பட பூண்டுகளின் வரத்து அதிகரித்துள்ளதால் கொடைக்கானல் மலைப்பூண்டின் விலை குறைந்துள்ளதாக கூறினார்.
விதைப்பூண்டு, நடவு, பராமரிப்பு ஆகியவற்றிக்கு ஆகும் செலவை கூட எடுக்கமுடியாது நிலை, உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மலைப்பூண்டின் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை கண்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டு வடுகப்பட்டி சந்தைக்கு அனுப்பப்படுகிறது. இந்த பூண்டை வாங்க வியாபாரிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் கிடைக்கும் விலைக்கு விற்கும் நிலை, உருவாகியுள்ளதாக கொடைக்கானல் விவசாயிகள் தெரிவித்தனர்.