கொச்சியில் பரபரப்பு தஸ்லிமா நஸ்ரின் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது
திருவனந்தபுரம்: கொச்சி கடவந்திராவில் உள்ள ஒரு உள்ளரங்கத்தில் நேற்று காலை பிரபல வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கலந்துகொள்ள இருந்த லிட்மஸ் 25 என்ற நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணியளவில் இந்த நிகழ்ச்சிக்கு ஆட்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபரிடம் துப்பாக்கி இருப்பதை அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரை பிடித்து துப்பாக்கியை கைப்பற்றினர்.
அவரிடம் விசாரித்ததால் அவர் கொச்சியைச் சேர்ந்த அஜீஷ் என தெரியவந்தது. தான் ஒரு முக்கிய கொலை வழக்கு சாட்சியின் மகன் என்றும், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதால் துப்பாக்கியுடன் வந்ததாகவும் அவர் போலீசிடம் தெரிவித்தார். அந்த கைத்துப்பாக்கிக்கு 2030ம் ஆண்டு வரை லைசென்ஸ் இருந்தது. இதனாலால் அந்த வாலிபரை போலீசார் விடுவித்தனர். இதற்கிடையே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிகழ்ச்சி பின்னர் தொடங்கியது.