கொச்சி அலுவலக கேன்டீனில் மாட்டிறைச்சிக்கு தடை போட்ட வங்கி மேலாளர்: விருந்து வைத்து போராடிய ஊழியர்கள்
கொச்சி: கொச்சி கனரா வங்கியின் மேலாளராக அண்மையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், கொச்சி கனரா வங்கியில் உள்ள கேன்டீனில் மாட்டிறைச்சி உணவு விற்கக் கூடாது, ஊழியர்கள் மாட்டிறைச்சி உணவு கொண்டுவந்து சாப்பிடக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் ஊழியர்கள் பரோட்டா, மாட்டிறைச்சி கிரேவி சப்ளை செய்து அலுவலக வளாகத்தில் விருந்து வைத்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. இதுபற்றி வங்கி கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.அனில் கூறுகையில்,’ வங்கியில் உள்ள சிறிய கேன்டீனில் வாரத்தின் சில நாட்களில் மட்டும் மாட்டிறைச்சி உணவு பரிமாறப்படுகிறது. ஆனால், புதிதாக வந்த மேலாளர் அதற்கு தடை விதித்தார். உணவு என்பது தனிப்பட்ட விருப்பம். எனவே இங்கே மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடந்தது உணவுக் கட்டுப்பாட்டுக்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் முறை’ என்றார்.