தாயை கத்தியை காட்டி மிரட்டியதால் சகோதரனை கொன்ற வாலிபர்: பழியை ஏற்றுக்கொண்டு சரணடைந்த தாயுடன் மகன் கைது, சூளைமேட்டில் பரபரப்பு
சென்னை: சூளைமேட்டில் குடித்து விட்டு தாயை கத்தியைக் காட்டி மிரட்டியதால் சகோதரனையே வாலிபர் கொலை செய்தார். ஆனால் மகனை காப்பாற்ற பழியை ஏற்றுக் கொண்ட தாயும், மகனும் கைது செய்யப்பட்டனர். சென்னை, சூளைமேடு, பெரியார் பாதையை சேர்ந்தவர் பரிமளா (47). கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள். அதில் 3வது மகன் முகில் (19), கூலி வேலை செய்து வருகிறார். இவர் குடி மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகினார். 2 மாதத்திற்கு முன்னர் கோடம்பாக்கம் போலீசார், வழிப்பறி வழக்கில் முகிலை கைது செய்தனர்.
அவருக்கு சிறையில் வலிப்பு ஏற்பட்டதால், அவரை ஜாமீனில் எடுக்கும்படி சிறை அதிகாரிகள் முகிலின் தாயிடம் கேட்டுக் கொண்டனர். இதனால் தாய் ஜாமீனில் எடுத்துள்ளார். ஜாமீனில் வந்த பிறகு தினமும் தாயிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பகலில் குடிப்பதற்கு பணம் கேட்டு தாய் பரிமளாவை அடிக்க முயன்றுள்ளார். பின்னர் கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து தங்க செயினை கொடுக்கும்படி மிரட்டியுள்ளார்.
இதனால் கையில் இருந்த பணத்தை முகிலிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். முகிலின் குடிப்பழக்கம் மற்றும் திருட்டு பழக்கத்தால் போலீசார் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றனர். இதனால் முகிலின் அண்ணன் வசந்தகுமார், எம்எம்டிஏ காலனி பகுதியில் வீடு எடுத்து கண்ணன் என்பவருடன் தங்கி, சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு வந்த வசந்தக்குமாரிடம், முகில் தகராறு செய்ததை தாய் பரிமளம் கூறியுள்ளார்.
இதனால், அவனை கொன்றால் தான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்று வசந்தகுமார் கூறியுள்ளார். அதன்பிறகு நேற்று அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு போதையில் வந்து, முகில் தூங்கிவிட்டார். இந்த தகவலை பரிமளா, மகன் வசந்தகுமாருக்கு தெரிவித்துள்ளார். உடனே அவர், 2 அடி நீள கத்தியை ஒரு பேக்கில் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் தாய் மட்டும் தூங்காமல் இருந்துள்ளார். முகிலும் கடைசி மகனும் தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் வசந்தகுமாருக்கு தனியாக கொலை செய்வதற்கு பயமாக இருந்தது.
இதனால் மீண்டும் வெளியில் சென்று, தன்னுடன் அறையில் தங்கியுள்ள கண்ணனை அழைத்துக் கொண்டு வந்தார். வரும் வழியில்தான் தம்பியை கொலை செய்யும் திட்டத்தை வசந்தகுமார் கூறியுள்ளார். நான் கொலை செய்கிறேன். எனக்கு பயமாக உள்ளது. நீ அருகில் நின்றால் போதும் என்று கூறியுள்ளார். அதன்படி 2 பேரும் வீட்டுக்கு வந்துள்ளனர். வசந்தகுமார் மட்டும் கத்தியை எடுத்து முகிலை கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரும் நண்பரும் தாங்கள் தங்கியிருந்த பகுதிக்குச் சென்று விட்டனர். காலை 5.30 மணிக்கு 2வது மகன் எழுந்து பார்த்தபோது முகில் பிணமாக கிடந்துள்ளார். அருகில் தாய் பரிமளா கத்தியுடன் இருந்துள்ளார். தான், முகிலை செய்து விட்டதாகவும், கூறியதோடு, நீ வேலைக்கு சென்று விடு, நான் போலீசில் சரணடைய போகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் 2வது மகன் வேலைக்கு சென்று விட்டார்.
அதேநேரத்தில் வசந்தகுமார், தனது மாமா வீட்டுக்குச் சென்று, ‘‘அம்மா பேசினார். உங்களை வரச்ெசான்னார்’’ என்று கூறிவிட்டு வேலைக்குச் சென்று விட்டார். மாமா, வீட்டுக்குச் சென்றபோது முகில் உடல் அருகே கத்தியுடன் பரிமளா இருந்துள்ளார். பின்னர் பரிமளாவே, வடபழனி போலீஸ்நிலையம் வந்து சரண் அடைந்துள்ளார். அவரிடம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விசாரணை நடத்தினார். அப்போது பரிமளா, நான்தான் முகிலை கொலை செய்தேன் என்றார்.
அதை வாக்குமூலமாக எடுத்த போலீசாருக்கு, முகிலின் உடலை பார்த்தபோது, கழுத்தில் பெரிய அளவில் வெட்டு இருந்தது. ஒரு வயதான பெண்ணால் கண்டிப்பாக இவ்வளவு ஆழமாக வெட்ட முடியாது என்று சந்தேகப்பட்டு விசாரித்தனர். ஆனால் பரிமளாவோ தான் மட்டுமே கொலையாளி என்று கூறியுள்ளார். இதனால், வீட்டுக்கு சென்று அருகில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கொலை நடந்த நேரம் அதிகாலை 3.20 மணிக்கு வசந்தகுமார் வருவதும், பின்னர் வெளியில் சென்று விட்டு மீண்டும் நண்பருடன் வருவதும், சிறிது நேரம் கழித்து இருவரும் புறப்பட்டுச் சென்றதும் தெரியவந்தது.
அதிகாலை 2.30 மணிக்கு அந்தப் பகுதிக்கு முகில் வந்துள்ளார். தெருவில் ரோந்து சென்ற போலீசார் முகிலை விசாரித்து விட்டு அனுப்பியுள்ளனர். 3 மணிக்கு வீட்டுக்குள் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வசந்தகுமார் வந்துள்ளார் என்பதால் சந்தேகமடைந்து அவரிடம் விசாரித்தபோது அவர், தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
மகனை காப்பாற்ற தாய் போலீசில் கதையை மாற்றிச் சொன்னதும் தெரிந்தது. இதனால், போலீசார் கொலை வழக்கில் வசந்தகுமார், நண்பர் கண்ணன் ஆகியோரையும், கொலைக்கு உடந்தை மற்றும் மறைத்த குற்றத்திற்காக தாய் மரிமளாவையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.