கிங்டம் திரைப்படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு தரக்கோரி வழக்கு: காவல்துறை, நா.த.க பதில் தர ஐகோர்ட் உத்தரவு
சென்னை: விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சென்சார் போர்டு அனுமதித்த திரைப்படத்தை வேறு எந்த வகையிலும் தடுக்க முடியாது. கருத்து தெரிவிக்க அனைத்து தரப்பினருக்கும் உரிமை உள்ளது. எந்த போராட்டமாக இருந்தாலும் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட வேண்டும். வன்முறையில் ஈடுபடக்கூடாது. படம் திரையிடுவதை தடுக்க கூடாது.
படத்தில் ஏதோ சொல்லி இருக்கிறார்கள் என்பதற்காக படத்தை தடுக்க முடியாது. மாறாக படத்துக்கு வழங்கிய சான்றிதழை ரத்து செய்யக்கோரி சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம் அல்லது படத்தை யாரும் பார்க்க வேண்டாம் என்று பிரசாரம் செய்யலாம் என கூறி பட வெளியீட்டு நிறுவனத்தின் மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் உத்தரவிட்டு விசாரணையை நாளை (இன்று) தள்ளி வைத்தார்.