கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்
*திண்டுக்கல் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
திண்டுக்கல் : கொப்பரை தேங்காய்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. எனவே அரசே கொள்முதல் செய்து உரிய விலை தர வேண்டும் என திண்டுக்கல்லில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
டிஆர்ஓ ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாகேந்திரன், வேளாண்மை துறை இணை இயக்குனர் பாண்டியன், உதவி இயக்குனர் உமா, கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தனர். கலெக்டர் சரவணன் தலைமை வகித்து விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 1,056 குளங்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதில் 350 குளங்கள் சீரமைக்கப்பட்டு விட்டது. 180 குளங்களில் பணிகள் நடந்து வருகிறது. விடுபட்ட குளங்கள் மாநில நிதி ஆணையர் சார்பில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகள் மட்டும் தெரிவிக்க வேண்டும்.
கடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 113 மனுக்கள் பெறப்பட்டு 53 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 11 மனுக்கள் நிராகரிக்கபட்டும், 49 மனுக்கள் பரிசீலனையிலும் உள்ளது. ஆகையால் இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து விவசாயிகள், அதிகாரிகள் இடையே நடந்த விவாதம் வருமாறு:*விவசாயி ஜான் பீட்டர்: நிலக்கோட்டை தாலுகா ராஜவாய்க்காலில் இருந்து தாமரைக்குளம், நரசிங்கபுரம், வீரசிக்கம்பட்டி செங்குளம் கண்மாய் வழியாக புதிய கால்வாய் அமைத்து பச்சிலைமரத்து கண்மாய் மைக்கேல்பாளையம் வழியாக சிராப்பட்டி கண்மாய்க்கு விவசாய தேவைக்கு நீர் கொண்டு வர வேண்டும்.கலெக்டர்: நீர் வரத்து கொண்டு வர கால்வாய் அமைப்பதற்கு சாத்திய கூறுகள் இருந்தால் அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
*விவசாயி தங்கவேல்: தங்கம்மாபட்டி தங்கம்மாள் குளத்தை தூர்வார வேண்டும். அதன் மதகுகளை சரிசெய்ய வேண்டும். கால்நடை விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும்.
கலெக்டர்: மாவட்டத்தில் தற்போது பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. விரைவில் அக்குளமும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
*விவசாயி சவுடமுத்து: வரதராஜபுரத்தில் பாதையை ஆக்கிரமித்து முட்செடிகள் வளர்ந்துள்ளது. அதனை அகற்ற வேண்டும். மேலும் 500 மீட்டர் அளவு புதிய ரோடு அமைக்க வேண்டும். புதுரோட்டில் பயணிகள் நிழற்குடை அருகே குப்பை தேங்கியுள்ளதால் அதில் பாம்புகள் குடியேறுகிறது. அதனை அகற்ற வேண்டும். கலெக்டர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
*விவசாயி பெரியசாமி: வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டி கூட்டுறவு சொசைட்டியில் பயிர் கடன் வழங்க மறுக்கின்றனர். மேலும் குடகனாறு அணை பகுதி மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: பயிர் கடன் வழங்கவும், குடகனாறு அணை பகுதியில் மதுபிரியர்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
*விவசாயி ராமர்: விருவீடு பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான இழப்பீடு கடந்த ஒரு வருடமாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
கலெக்டர்: உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*விவசாயி மனோகரன்: கொடைக்கானல் பூண்டி பகுதியில் தனியார் இடங்களில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கலெக்டர்: விசாரணை செய்யப்படும்.
*விவசாயி ஜான் பெலிக்ஸ்: டி.பஞ்சம்பட்டி பகுதியில் 2016ம் ஆண்டு திருமண உதவித்தொகை திட்டத்தில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கலெக்டர்: உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
*விவசாயி செல்வம்: நிலக்கோட்டை பகுதியில் தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. மேலும் கண்மாயிகளுக்கு போதிய நீர் வரத்து இல்லை. ஆகையால் மஞ்சளாறு அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். மேலும் மஞ்சளாறு அணையில் கழிவுநீர் கலக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
*விவசாயி அழகியண்ணன்: சத்திரப்பட்டி அருகே நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
*விவசாயி சங்கரசுப்பு: நத்தம் மெயின் ரோட்டில் இருந்து சிறுமலை அடிவாரம் பகுதிக்கு ரோடு அமைத்து தர வேண்டும்.
கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
*விவசாயி செல்லத்துரை: கொய்யா பழத்திற்கு போதிய விலை இல்லை. சிறுமலை அடிவார பகுதியில் காட்டு மாடுகளால் சேதப்படுத்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.
கலெக்டர்: இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*விவசாயி சதீஷ்குமார்: ரெட்டியார்சத்திரம் அருகே கசவனம்பட்டியில் கிராமசபை கூட்டம் முறையாக நடைபெறவில்லை.
கலெக்டர்: விசாரணை நடத்தப்படும்.
*விவசாயி கோபால்: வத்தலகுண்டு பேரூராட்சியில் புதிய கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளில், மீண்டும் பழைய நபர்களுக்கு வழங்க வேண்டும். உழவர் சந்தை செயல்படுத்த வேண்டும்.
வேளாண்மை துறை உதவி இயக்குனர்: உழவர் சந்தை செயல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம், விவசாயிகள் வரவேண்டும்.
*விவசாயி பாத்திமா ராஜரத்தினம்: கொப்பரை தேங்காய்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. எனவே அரசே கொள்முதல் செய்து உரிய விலை தர வேண்டும்.
கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி முருகன்: செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி அலக்குவார்பட்டி காப்பிளியபட்டி வழியாக வண்டி பாதை அளந்து அத்துமால் போட வேண்டும்.
கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
*விவசாயி சேவியர்: வெள்ளோடு அணையில் இருந்து ராஜாக்கா வாய்க்காலை சீரமைக்க வேண்டும். பஞ்சம்பட்டி குளத்தில் மண் திருடப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
தூர்வாருப்படும் குளங்களில் கரைகளில் மரங்கள் நட வேண்டும்.
கலெக்டர்: தற்போது தூர்வாரப்படும் குளங்களில் மரங்கள் நட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.