கைனடிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
கைனடிக் குழுமத்தின் மின் வாகன உற்பத்தி நிறுவனமான கைனடிக் வாட்ஸ் அண்ட் வோல்ட்ஸ், கைனடிக் டிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. முன்பு இந்தியச் சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்த கைனடிக் ஹோண்டா டீலெக்ஸ் ஸ்கூட்டரை போன்றே இது வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில், 4.8 கிலோ வாட் திறன் கொண்ட ஹப் மோட்டார் இடம் பெற்றுள்ளது. 2.6 கிலோ வாட் அவர் லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 102 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லலாம். டிஎக்ஸ் பிளஸ் வேரியண்ட் உள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால், 116 கிலோமீட்டர் தூரம் வரை செல்லலாம். அதிகபட்சமாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும். 2 மணி நேரத்தில் 50 சதவீதம் வரையிலும், 3 மணி நேரத்தில் 80 சதவீதம் வரையிலும் சார்ஜ் செய்யலாம். சார்ஜர் 15 ஆம்ஸ் பிளக் டூவீலரிலேயே பொருத்தப்பட்டுள்ளது.
டிஎக்ஸ் மற்றும் டிஎக்ஸ் பிளஸ் ஆகிய 2 வேரியண்ட்களிலும் ரேஞ்ச், பவர், டர்போ என 3 ரைடிங் மோடுகள் உள்ளன. ஹில் ஹோல்ட் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல், குரூஸ் லாக் (30 கி.மீ வேகத்துக்குள்) வசதிகள் இடம் பெற்றுள்ளன. 25 கி.மீ முதல் 30 கி.மீ வேகத்துக்குள் குரூஸ் லாக் செய்து ஓட்டினால் 150 கி.மீ தூரம் வரை செல்லலாம் என நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முழுமையான எல்இடி லைட்டிங், 12 அங்குல வீல்கள், 8.8 அங்குல வண்ண எல்சிடி டிஸ்ப்ளே, உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சீட்டுக்கு அடியில் 37 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஸ்டோரேஜ் வசதி உள்ளது. ஷோரூம் விலையாக, துவக்க வேரியண்ட் சுமார் ரூ.1.11 லட்சம் எனவும், டாப் வேரியண்ட் சுமார் ரூ.1.17 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.