கிணத்துக்கடவில் புதிதாக கட்டப்பட மாமாங்கம் ஆற்றுப்பாலம் போதை பொருட்கள் பயன்படுத்தும் இடமாக மாறிய அவலம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவில் புதிதாக கட்டப்பட்ட மாமாங்கம் ஆற்றுப்பாலம் போதை பொருட்கள் பயன்படுத்தும் இடமாக மாறி உள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சொலவம்பாளையம் ஊராட்சி பகுதியில் பழமை வாய்ந்த மாமாங்கம் ஆறு உள்ளது. மழை காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளம் வரும்போது ஆற்றை கடக்க வழியின்றி அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பொதுமக்களின் நிலையை உணர்ந்த பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி இங்கு பாலம் கட்ட முயற்சி மேற்கொண்டார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்பு திட்டத்தின் மூலம் மாமாங்கம் ஆற்றின் குறுக்கே குழாய்கள் அமைந்து பாலம் கட்ட ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 6 மாதங்களுக்கு முன்பு பணி துவங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த பாலம், தற்போது சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருவது வேதனையை அளிக்கிறது.
போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள், இரவு நேரம் மட்டுமின்றி பகலிலும் கும்பலாக பாலத்தின் மீது அமர்ந்து, மது அருந்துவது, கஞ்சா குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் பாலத்தின் வழியாக செல்ல மிகுந்த அச்சப்பட்டு வருகின்றனர். போலீசார் இப்பகுதியில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.