கீழ்பென்னாத்தூர் பகுதிக்கு ரூ.11.41 கோடியில் தென்பெண்ணை குடிநீர் திட்ட மறு சீரமைப்பு பணி
*துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை : தென்பெண்ணையாற்று குடிநீரை பயன்படுத்தி பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதில், கீழ்பென்னாத்தூர் பகுதிக்கான தென்பெண்ணை கூட்டு குடிநீர் திட்டம் மிக முக்கியமானது. இத்திட்டத்தின் மூலம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி மற்றும் அந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட 156 கிராமப் பகுதிகள் குடிநீர் வசதியை பெறுகின்றன.
இத்திட்டம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, கீழ்பென்னாத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பெரும்பான்மையாக தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தை மறு சீரமைப்பு செய்ய அரசு ரூ.11.41 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்மூலம், சுமார் 60 கி.மீ நீளத்திற்கு தென்பண்ணை கூட்டு குடிநீர் திட்ட நீருந்து குழாய்கள் மற்றும் 33 மின் மோட்டார்கள் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இப்பணியை மேற்கொள்கிறது. இந்நிலையில், கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட ஏர்பாக்கம் பகுதியில் தென்பெண்ணை கூட்டு குடிநீர் திட்ட மறு சீரமைப்பு பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் கு.முத்துராமன், நிர்வாகப் பொறியாளர் சுரேஷ் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.