கிட்னி திருட்டு வழக்கில் 2 புரோக்கர்கள் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கவுசல்யா. இவர், கிட்னி விற்பனை செய்ததாக தகவல் வந்தது. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில், திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை செய்ததும், இதற்காக மருத்துவமனை நிர்வாகம், ரூ.6 லட்சம் வழங்கியதும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், மேலும் பலரிடம் கிட்னி திருட்டு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கிட்னி புரோக்கர் ஆனந்தனை போலீசார் தேடி வந்தனர்.
இந்த கிட்னி திருட்டு மோசடி தொடர்பாக மற்றொரு புரோக்கர் ஸ்டாலின் மோகன்(48) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே, கிட்னி திருட்டு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், புரோக்கர்கள் ஆனந்தன், ஸ்டாலின் மோகன் ஆகிய இருவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர், நேற்று அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.