சிறுநீரக விற்பனை முறைகேட்டில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை: சிறுநீரக விற்பனை முறைகேட்டில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில், கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. இந்நிலையில், அதிமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது;
கிட்னி விற்பனை இப்போது மட்டுமின்றி முந்தைய காலங்களிலும் நடந்துள்ளது. சிறுநீரக விற்பனை முறைகேட்டில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் கிட்னி திருட்டு புகார் தொடர்பாக 2 இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக முறைகேடு புகாரில் ஸ்டாலின் மோகன், ஆனந்த் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுநீரக விற்பனை முறைகேட்டில் யாராலும் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த மருத்துவமனையாக இருந்தாலும் யாருடையதாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். திருச்சி சிதார், பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவமனை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிட்னி திருட்டு புகார் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படுகிறது. தவறான சான்றிதழ்களை வழங்கியதும், சட்ட நுணுக்கங்களை தவறாக பயன்படுத்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. புகாருக்குள்ளான மருத்துவமனைகளின் உரிமங்கள் பாகுபாடின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வழங்கிய சான்றிதழும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 4 இடங்களில் உள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தை மறுசீரமைத்துள்ளோம். சிறுநீரக விற்பனை முறைகேடு புகாரில் மருத்துவத்துறையை சேர்ந்த 7 பேர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்களை அங்கீகரிக்க மாநில அளவிலான அங்கீகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக முறைகேடு தொடர்பாக கண்காணிக்க மருத்துவக் கல்வி இயக்குநர், அனைத்து ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அத்துடன், உடல் உறுப்புகளை விற்பனை செய்வது தவறானது என விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.