கல்லீரல் பிரச்சனை காரணமாக துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த அபிநய் காலமானார்!!
சென்னை : செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்த அபிநய், உடல்நலக் குறைவால் இன்று காலை 4 மணிக்கு காலமானார். அவருக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ் தவிர மலையாளம் உள்ளிட்டத் திரையுலகிலும் நடித்துள்ளார். 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் அபிநய், விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர்.
சூர்யாவின் 'அஞ்சான்', கார்த்தியின் 'பையா', 'காக்கா முட்டை' ஆகியப் படங்களில் சில கதாபாத்திரங்களுக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். 44 வயதாகும் அபிநய், சிலகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். படங்கள் வாய்ப்பு இல்லாததாலும், நிலையான வருமானம் இல்லாததாலும் அவர் வறுமையில் சிக்கினார். அபிநய்க்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலமும் குன்றியது. இந்த நிலையில், கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபிநய் இன்று அதிகாலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .