கைபர் பக்துன்வா மாகாணத்தில் பாக். விமானப்படை குண்டுமழை பொதுமக்கள் உட்பட 30 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்வா மாகாணம் உள்ளது. வடமேற்கில் உள்ள இந்த மாகாணத்தின் கிழக்கில் பஞ்சாப் மாகாணம், தெற்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், மேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லை உள்ளது. மலை பாங்கான இந்த பகுதிக்குள் செல்வது மிகவும் கடினம். இந்த பகுதியில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான்(டிடிபி) உள்ளிட்ட தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,கைபர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் விமான படை விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 30 பேர் பலியானதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெஹ்ரீக் இ தலிபான் தீவிரவாதிகள் தெற்கு வசீரிஸ்தானில் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக தான் பாகிஸ்தான் ராணுவம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என தெரியவந்துள்ளது. போலீசார் கூறுகையில், தலிபான் தீவிரவாதிகளின் தளபதிகளான அமன் குல், மசூத் கான் ஆகியோர் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் ஆலையை நிறுவியுள்ளனர். இதில் உள்ளூர் மக்கள் பலர் பணிபுரிகின்றனர். பொதுமக்களை மனித கேடயமாக தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர் என்று குற்றம்சாட்டினர்.
* ‘தீவிரவாதிகளின் ஆயுத ஆலை அழிப்பு’
கைபர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஸபர் கான் கூறுகையில், மதுர் தரா என்ற கிராமத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10 பொதுமக்கள் மற்றும் 14 தீவிரவாதிகள் பலியாகினர்.குறிப்பிட்ட இடம் தெஹ்ரீக் தலிபான் அமைப்புக்கு சொந்தமான ஆயுத ஆலை. அதில் வெடிகுண்டுகளை சேமித்து வைத்திருந்தனர். அப்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அங்கு விமான படை தாக்குதல் நடத்தவில்லை என்றார். ஆனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பாகிஸ்தான் விமான படை தாக்குதலில் குடியிருப்பு கட்டிடம் தரைமட்டமானது என்றனர்.