கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் கைவரிசை பாலிவுட் நடிகரின் ‘கபே’ மீது துப்பாக்கிச் சூடு
ஒட்டாவா: கனடாவில் பாலிவுட் நடிகரின் ‘கபே’ மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட்டின் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மா உலகெங்கும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில், கபில் சர்மா புதிதாக தொடங்கிய ‘கேப்ஸ் கஃபே’ என்ற உணவகம் அமைந்துள்ள கட்டிடம் மீது நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு, தேசிய புலனாய்வு முகமையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள காலிஸ்தான் தீவிரவாதி ஹர்ஜீத் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளார். கபில் சர்மாவின் சர்ச்சைக்குரிய பழைய கருத்து ஒன்றே, இந்த தாக்குதலுக்கு காரணம் என்று தீவிரவாதி ஹர்ஜீத் சிங் லட்டி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 12 முறை துப்பாக்கியால் சுடப்பட்ட இந்த சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குடியிருப்பு பகுதிக்கு நடுவே, குழந்தைகள் காப்பகம் ஒன்றுக்கு எதிரில் அமைந்துள்ள இந்த உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.