கேரள சட்டசபையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தீர்மானம்
திருவனந்தபுரம்: பீகார் உள்பட பல்வேறு மாநிலங்களில் மத்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. லட்சக்கணக்கானோர் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் கேரள சட்டசபையில் இதற்கு எதிராக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியது: மத்திய தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நல்ல எண்ணத்துடன் கொண்டு வரப்பட்டதாக கருத முடியாது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை எழுப்புகிறது. இது தேசிய குடியுரிமை சீர்திருத்த சட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்பட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.