கேரளாவில் இருந்து ஆன்லைன் மூலம் வாங்கி போதை பொருள் விற்ற ஐடி ஊழியர் சிக்கினார்: ஓஜி கஞ்சா, கெட்டமைன் பறிமுதல்
சென்னை: கேரள மாநிலத்தில் போதை பொருள் விற்ற நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதிகளவில் சென்னைக்கு ஆர்டரின் பெயரில் போதை பொருட்கள் அனுப்பியது தெரியவந்தது. இதுகுறித்து சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில், அதிகாரிகள் மேற்கு சைதாப்பேட்டை ராமாபுரம் ராமசாமி தெருவில் வசித்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஐடி ஊழியரான மல்லிகா அர்ஜூன் சர்மா (28) வீட்டில் அதிரடி சோதனை நடத்தி 120 எல்எஸ்டி ஸ்டாம்ப், 2.61 கிராம் கெட்டமைன், 58 மில்லி கிராம் ஓஜி கஞ்சா மற்றும் கஞ்சா பேஸ்ட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இவர் அளித்த தகவலின் படி, தனது தொழில் பாட்னரான மேற்கு மாம்பலம் அண்ணாமலை நகர் 1வது தெருவை சேர்ந்த பாலா சூர்யா (28) என்பவர் மூலம் சென்னை முழுவதும் ஆர்டரின் பெயரில் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து பாலா சூர்யா வீட்டில் போதை பொருள் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் 20 எல்எஸ்டி ஸ்டாம்புகள், 5 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து ஐடி ஊழியரான மல்லிகா அர்ஜூன் சர்மா மற்றும் அவரது கூட்டாளி பாலா சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.