கேரளா ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு பெற்ற பெயின்ட் கடை ஊழியர்
திருவனந்தபுரம்: ரூ. 25 கோடிக்கான கேரளா அரசிஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் கடந்த 4ம் தேதி நடந்தது. TH 577825 என்ற எண்ணுக்கு முதல் பரிசு விழுந்தது. இந்த டிக்கெட் கொச்சி நெட்டூர் பகுதியிலுள்ள ஒரு கடையில் விற்பனையானது தெரியவந்தது. எனவே நெட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தான் அந்த மகா அதிர்ஷ்டசாலியாக இருக்கும் என்று கருதப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக அந்த அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் இருந்தது. இதற்கிடையே பரிசு விழுந்தது குறித்து தெரிந்தால் பணம் கேட்டு தொல்லை கொடுப்பார்களோ என பயந்து அந்த அதிர்ஷ்டசாலி வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்த அதிர்ஷ்டசாலி ஆலப்புழா அருகே உள்ள துறவூர் பகுதியைச் சேர்ந்த சரத் எஸ். நாயர் என தெரியவந்துள்ளது. இவர் கொச்சி நெட்டூரில் ஒரு பெயின்ட் கடையில் பணிபுரிந்து வருகிறார். வேலைக்கு வந்த இடத்தில் தான் இவர் பம்பர் லாட்டரி வாங்கியுள்ளார். பரிசு விழுந்த டிக்கெட்டை இவர் நேற்று ஆலப்புழாவிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்தார்.