கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பிஜு(45) என்பவர் உயிரிழந்தார். இடுக்கி-அடிமாலி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் 6 வீடுகள் மீது மண்சரிந்து விபத்து ஏற்பட்டது.
நேற்று மாலை தொடர் மழையால் சாலை பணி நடக்கும் இடத்தில் மண்சரிவு ஏற்படும் ஆபத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதிகாரிகளின் அறிவுறுத்தலை அடுத்து அப்பகுதியில் 22 வீடுகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
நேற்றிரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க பிஜுவும் அவரது மனைவி சந்தியா ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் தம்பதியினர் இருவரும் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர்வாசிகளின் பல மணி நேர மீட்புப் பணிகளுக்குப் பிறகு, இருவரும் மீட்கப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கிய பிஜு உயிரிழந்தார். அவரின் மனைவி சந்தியா காலில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .நிலச்சரிவால் இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன. அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.