கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு டிச. 20 வரை ஜனாதிபதி கெடு
புதுடெல்லி: இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி நிஷா பானு வரும் 20ம் தேதிக்குள் கேரள உயர்நீதிமன்றத்தில் பதவியேற்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஜே.நிஷா பானுவை, நிர்வாகக் காரணங்களுக்காகக் கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யக் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒன்றிய அரசு கடந்த அக்டோபர் 14ம் தேதி வெளியிட்டது.
ஆனால், இரண்டு மாதங்களாகியும் அவர் புதிய பொறுப்பை ஏற்காமல், தனது மகனின் திருமணம் மற்றும் பணி மூப்புப் பாதிப்பு (சீனியாரிட்டி) ஆகிய காரணங்களைக் கூறி விடுப்பில் இருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 3வது மூத்த நீதிபதியாக இருந்த அவர், கேரளாவிற்குச் சென்றால் 9வது இடத்திற்குத் தள்ளப்படுவார் என்பதால் மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இந்த இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதேவேளையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அவர் பணியில் சேராதது ‘நீதித்துறை ஒழுக்கமின்மை’ என மற்றொரு தரப்பு வழக்கறிஞர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், ‘நீதிபதி நிஷா பானு வரும் 20ம் தேதிக்குள்ளாகக் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்க வேண்டும்’ என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விளக்கமளித்த ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ‘அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 217-ன் படி ஒரு நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டாலே, அவர் பழைய பதவியை காலி செய்ததாகக் கருதப்படுவார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.